சமீப காலமாக வெளிவரும் தமிழ் சினிமாவின் கதைகள் உலகப் படங்களில் இருந்து திருடப் பட்டவையே.
ஒரு படத்தை காப்பி அடித்து எடுத்து விட்டு "பத்து வருடத்திற்கு முன்னாலேயே நான் இந்த கதையை யோசித்தேன் என்று அவதார் பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் போல" கூச்சப் படாமல் பந்தாவாய் நடிகைகளுடன் உட்கார்ந்து டிவிகளில் பேட்டி கொடுக்கும் இயக்குனர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது
சமீபத்திய புதுவரவு "தெய்வத் திருமகள்". இதன் சிறப்பே ஹீரோவின் காஸ்ட்யும் முதற்கொண்டு ஹேர் ஸ்டைல் வரை அப்படியே அலேக்காக காப்பி அடித்தது தான்.
தமிழில் சொந்தமாய் கதை யோசித்து படம் எடுக்கும் இயக்குனர்கள் ஹரி, லிங்குசாமி, பேரரசு போன்ற ஒரு சிலரே.
"ஏன் இந்த இயக்குனர்கள் கவலைப் படாமல் காப்பி அடிக்கிறார்கள்?" என்ற கேள்விக்கு முண்ணனி ப்ளாகர் ஒருவர்,
"தமிழ் நாட்டின் பெருவாரியான மக்கள் உலக படங்கள் பார்க்காததே இதற்கு காரணம். இங்கு என்னைப் போன்ற சில சதவிகித மக்களே உலக படங்களுக்கு பரிட்சயம். படித்த மக்களின் அறிவே இன்னும் தமிழ்நாட்டை தாண்ட வில்லை. இன்னும் அவர்கள் கமலையும், ரஜினியையுமே கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். அதனால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் இருண்டகாலம் ஆகி கொண்டிருக்கிறது. இது தடுக்கப் பட வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எந்த ஆண்டவனாளையும் காப்பாற்ற முடியாது." என்று
பதிலளித்தார்.
இது போல படைப்பு திருட்டுகளை (plagiarism) ஒழிக்க, பிரபல பதிவர்கள் எல்லாம் சேர்ந்து, அந்தந்த ஒரிஜினல் படங்களை எடுத்த ஹாலிவுட் நிறுவனங்களுக்கு மெயில் அனுப்பி இத்திருட்டைப் பற்றி தெரிவிக்க ஆலோசித்துள்ளார்கள்.
ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டம் போல, இது மெயில் அனுப்பும் போராட்டம்.
வரும் ஞாயிற்றுக் கிழமை மெரீனா கடற்கரையில் காந்தி சிலைக்கு அருகில் பதிவர்கள் கூடி, சரியாக நாலு மணிக்கு ஒவ்வொருவரும் தங்கள் இன்டர்நெட் கனெக்சனுடன் கூடிய லேப்டாப்பில் இருந்து மெயில் அனுப்புவார்கள்.
மெரினாவுக்கு வரமுடியாத நபர்கள் வீட்டிலிருந்தோ அல்லது அருகில் உள்ள ப்ரொவ்சிங் சென்டர்களில் இருந்தோ மெயில் அனுப்பலாம்.
இந்த செய்தியை கேள்விப்பட்ட தமிழ் சினிமா இயக்குனர்கள் சங்கமே ஆடி போயிருக்கிறது.
காப்பியடித்து படம் எடுத்து விட்டு கர்வத்துடனும், சிலசமயம் தன்னை யாரும் கொண்டாடவில்லையே என ஆதங்கத்துடனும் அலையும் மிஸ்கின் அவர்கள் தன் ரூமில் உலகப் படங்களின் சிடிக்கள் சிதறிக் கிடக்க, குவார்ட்டர் அடித்து நிலைகுலைந்து போயிருக்கிறார். ஒரு வாரம் அவர் தன்னுடைய கருப்பு கண்ணாடியை போடாமல் சுற்றி அலைந்ததாக தெரிகிறது.
"மங்காத்தாவின்" இறுதி கட்ட வேளைகளில் மூழ்கி இருந்த வெங்கட் பிரபுவோ, திரிஷாவிடம் போன் செய்து புலம்பி உள்ளார். தமிழ் ராப் இசை கலைஞன் பிரேம்ஜியும் அவருக்கு ஆதரவாய் திக்கி திக்கி நாலு வார்த்தை பேசியுள்ளார்.
இந்த செய்தியை கேள்விப்பட்டதிலிருந்து, கவுதவ் மேனன் அவர்கள் இரண்டு நாளாக சரியாக சாப்பிடவில்லையாம். தெய்வத் திருமகள் விஜய் அவர்கள், "விண்ணை தாண்டி வருவாயா" ஹிந்தி படப் பிடிப்பில் இருக்கும் எமி ஜாக்ஸனிடம் சாட் செய்து தன் மனகுமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.
எதோ ஒரு உலகப் படத்தை உருவி, அந்த கதையை எப்படி மாற்றி கொத்து பரோட்டா போடலாம் என சீரியஸாக கதை விவாதத்தில் இருக்கும் "மாற்றான்" படத்தின் இயக்குனர் கே.வி ஆனந்த், இந்த படத்தை ட்ராப் பண்ணி விடலாமா என யோசித்து வருகிறார்.
இதனால் இந்த தமிழ் சினிமா இயக்குனர்கள் அனைவரும் அடுத்து எந்த ஒரு படத்தையும் காப்பி அடிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
ஆங்கில காப்பி படங்களில் நடிக்கும் உலக நாயகன் கமல் உட்பட முன்னணி நடிகர்கள் அனைவரின் எதிர்காலமும் இதனால் கேள்வி குறியாகி உள்ளது.
சாதரணமாக தமிழ் பாடல்களை ரீமேக் பண்ண மறுத்து, ஆங்கில பாடல்களை மட்டுமே காப்பி அடிக்கும் ஜீவி பிரகாஷ் அவர்கள் இந்த மெயில் போராட்டத்தை பற்றி கருத்து சொல்ல மறுத்து விட்டார்.
தங்கள் தகிடு தத்தங்களை உலகுக்கு தெரிவிப்பதில் கூகுளின் பிளாகரும், வோர்ட் பிரஸ்சும் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றை தடை செய்ய முடியுமா? எனவும் கனவு காண்கிறார்கள்.
இனி ஹரி, லிங்குசாமி, பேரரசு காட்டில் மழை தான். அவர்களின் படங்களில் நடிக்க இனி ஒவ்வொரு ஹீரோவும் "அவன் இவன்" விஷால் ஆர்யா போல கட்டி புரண்டு சண்டை போடுவார்கள்.