Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Sep 22, 2011

உதவி இயக்குனர்களுக்கு 3G Broadband கனேக்சனுடன் லேப்டாப் வழங்கிய டைரக்டர் விஜய்




மிஷ்கின் தமிழ் சினிமாவின் ஒரு வித்தியாசமான இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த மாதம் அவர் தன் உதவி இயக்குனர்களுக்கு நிறைய வசதிகளை செய்து கொடுத்தது, திரையுலகில் பரவலாய் பேசப் பட்டது.

தங்கும் வசதி.
டேபிள் டென்னிஸ் விளையாடுவதற்கான பொருட்கள்.
தனி லைப்ரரி.
பேங்க் அக்கௌண்டில் மாதாமாதம் குறிப்பிட்ட தொகை.

அதை கேள்விப்பட்ட "மதராசப் பட்டினம்", "தெய்வதிருமகள்" புகழ் இயக்குனர் விஜய் அவர்களும் அவருடைய உதவி இயக்குனர்களுக்கு ஏதாவது செய்து கொடுக்க நினைத்தார்.

அப்போது உதித்தது தான் இந்த ஐடியா.

சோனி VAIO லேப்டாப்புடன் ரிலைன்ஸ் 3G நெட்வொர்க் அன்லிமிடெட்(Unlimited) கனெக்சன்.


தன் உதவி இயக்குனர்கள் இனி கதை தேடி பர்மா பஜார் சென்று கால் கடுக்க அலைய கூடாது என்ற நல்லெண்ணத்திலேயே இந்த முடிவு எடுத்ததாக அவர் கூறினார்.


அது தவிர இலவச டோர்ரென்ட்(Torrent) சாப்ட்வேர் மூலமாக எந்த நாட்டு மொழி படத்தையும் சிரமம் இல்லாமல் டவுன்லோட் செய்து சப்டைட்டிலுடன் பார்க்க முடிவதால், வசனங்கள் புரிவதிலும் எழுதுவதிலும் பிரச்சினை இல்லை.

இதைப் பற்றிய செய்தியை நம்மிடம் பகிர்ந்து கொண்ட விஜயின் உதவியாளர்களில் ஒருவர் "புதிதாய் ஒரு கதையை தேடுவதில் தமிழ் இயக்குனர்களிடையே பயங்கர போட்டி நிலவுவதால், இந்த வசதி என் கேரியரை தக்க வைக்க உதவும்" என்று கூறினார்.


பிரபல இயக்குனர்களின் இந்த செயல், மற்ற பிரபல இயக்குனர்களான கே.வி ஆனந்த், கவ்தவ் மேனன், உலக நாயகன் மற்றும் கே.எஸ் ரவிகுமார் போன்றவர்களிடம் ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களும் தங்கள் உதவி இயக்குனர்களுக்கு என்ன கொடுப்பதென்று ரூம் போட்டு யோசித்து வருகிறார்களாம்.


ஆனால் "ஜெயம்" ராஜா மட்டும் இதை பற்றி கவலைப் படாமல் ஹைதிராபாத்தில் சுற்றி வருவதாக தகவல்கள் சுற்றி வருகின்றன.



Aug 30, 2011

டெல்லி போலீஸின் பெல்லியை கலக்கிய டாக்டர் விஜய்

கடந்த வாரங்களில் அன்னா ஹசாரேவின் போராட்டத்தில் ஒரு முக்கிய திருப்பு முனை நடந்ததென்று சொன்னால், அது நம்ம இளைய தளபதியின் (இன்னும் எத்தனை வருஷத்திற்கு?) டெல்லி விஜயமும், ஊழலுக்கு எதிரான அவரது ஆதரவும் தான்.

அவர் தன்னை ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இந்த தமிழுலகத்திற்க்கு அறிவிக்கும் நிகழ்வாக இந்த நிகழ்ச்சி தென்படுகிறது.





ஊழலுக்கு எதிரான ஆதரவை மட்டுமே, அன்னா ஹசாரேவுக்கு கொடுக்க அவர் சென்றிருந்தார் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறானதே!.

அன்னா ஹசாரேவை கவனிக்க அங்கேயே நிறைய டாக்டர்கள் இருந்தார்களே, அப்புறம் எதற்கு நம்ம டாக்டர் டெல்லி சென்றார்?  என்று நீங்கள் கேட்கலாம்.

அவர் போவதற்கு முன்பு, டெல்லி போலிஸ் அன்னா ஹசாரேவை வலுக்கட்டாயமாய் ராம்லீலா மைதானத்திலிருந்து வெளியேற்றுவதாய் செய்தி கசிந்ததை அடுத்தே, விஜய் அவர்கள் அன்னா ஹசாரேவுக்கு பாதுகாப்பு கொடுக்க தீர்மானித்து, தன் ரசிக கண்மணிகளோடு டெல்லி புறப்பட்டார்.

ஏற்கனவே அசினுக்கு அவர் பாடிகார்டாக, காவலன் படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அன்னா ஹசாரேவுக்கு பாதுகாப்பு கொடுத்து, அவர் நாட்டுக்கே காவலனாக மாறிவிட்டார்.

விஜய்யின் டெல்லி விஜயம் பற்றி அறிந்த டெல்லி போலீஸாரின் பெல்லி(வயிறு) எல்லாம் கலங்கி விட்டது. இதனால் அன்னாவை வெளியேற்றும் அவர்கள் திட்டம் தவிடு பொடியானது.

டெல்லி போலீஸாரின் இந்த கலக்கத்திற்கு காரணம், விஜய் அவர்கள் தன் மாஸ்டர் பீஸ் களான, குருவி, சுறா படங்களை அவர்களுக்கு போட்டு காட்டி பயமுறுத்தி உள்ளார். இனியும் டெல்லி போலீசார் வேறு ஏதாவது திட்டம் தீட்டினால், தானே அடுத்து நேரடி ஹிந்தி படங்களில் அடுத்தடுத்து நடிப்பேன் என்று கூறியும் மிரட்டியுள்ளார்.

இதனை டெல்லி போலீசார் ஒருவர் நம் Tamil Faking News -க்கு தெரிவித்தார். அவர் வேண்டாம் என்று கேட்டு கொண்டதால் அவர் பெயரை இங்கு வெளியிடவில்லை.





அன்னா ஹசாரேவின் போராட்டம் ஓரளவு வெற்றி பெற்றதில் தமிழகத்தின் பங்களிப்பை அதிகம் இடம் பெற செய்ததில், விஜய் மக்கள் மனதில் நீங்கா இடம் பெறுகிறார்.

நடிகர் விஜய்யின் "மக்கள் கட்சி" வருகின்ற பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதாக வந்த செய்தியை அடுத்து, இது மக்களிடையே நன் மதிப்பை பெரும் முயற்சியா? என்ற கேள்விக்கு, அவர் தந்தை எஸ்.எ. சந்திர சேகர் அவர்கள்,

'இது எதையும் எதிர்பாராமல், நாட்டு நலனை கருதியே அவர் தானாக எடுத்த முடிவு. என் மகன் விஜய் சொல்லித்தான், தமிழ்நாட்டு மக்கள் போன தேர்தலில் ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்தார்கள். முதல்வரையே தேர்ந்தெடுத்த விஜய்க்கு, அடுத்து பிரதமரையும் தேர்ந்தெடுக்கும் வல்லமை உள்ளது. 2016 -இல் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார். 2020 -இல் விஜய் இந்தியாவின் பிரதமர் ஆவார். அப்போது தான் அப்துல் கலாமின் "இந்தியா 20-20" கனவு நனவாகும்'

என்று நம்பிக்கையோடு Tamil Faking News -க்கு பதிலளித்தார்.


Jul 22, 2011

காப்பி அடிக்க பயப்படும் தமிழ் சினிமா இயக்குனர்கள்

சமீப காலமாக வெளிவரும் தமிழ் சினிமாவின் கதைகள் உலகப் படங்களில் இருந்து திருடப் பட்டவையே. 

ஒரு படத்தை காப்பி அடித்து எடுத்து விட்டு "பத்து வருடத்திற்கு முன்னாலேயே நான் இந்த கதையை யோசித்தேன் என்று அவதார் பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் போல"  கூச்சப் படாமல் பந்தாவாய் நடிகைகளுடன் உட்கார்ந்து டிவிகளில் பேட்டி கொடுக்கும் இயக்குனர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது 

சமீபத்திய புதுவரவு "தெய்வத் திருமகள்". இதன் சிறப்பே ஹீரோவின் காஸ்ட்யும் முதற்கொண்டு ஹேர் ஸ்டைல் வரை அப்படியே அலேக்காக காப்பி அடித்தது தான்.

தமிழில் சொந்தமாய் கதை யோசித்து படம் எடுக்கும் இயக்குனர்கள் ஹரி, லிங்குசாமி, பேரரசு போன்ற ஒரு சிலரே.

"ஏன் இந்த இயக்குனர்கள் கவலைப் படாமல் காப்பி அடிக்கிறார்கள்?" என்ற கேள்விக்கு முண்ணனி ப்ளாகர் ஒருவர்,

"தமிழ் நாட்டின் பெருவாரியான மக்கள் உலக படங்கள் பார்க்காததே இதற்கு காரணம். இங்கு என்னைப் போன்ற சில சதவிகித மக்களே உலக படங்களுக்கு பரிட்சயம். படித்த மக்களின் அறிவே இன்னும் தமிழ்நாட்டை தாண்ட வில்லை. இன்னும் அவர்கள் கமலையும், ரஜினியையுமே கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். அதனால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் இருண்டகாலம் ஆகி கொண்டிருக்கிறது. இது தடுக்கப் பட வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எந்த ஆண்டவனாளையும் காப்பாற்ற முடியாது."  என்று
பதிலளித்தார். 

இது போல படைப்பு திருட்டுகளை (plagiarism) ஒழிக்க, பிரபல பதிவர்கள் எல்லாம் சேர்ந்து, அந்தந்த ஒரிஜினல் படங்களை எடுத்த ஹாலிவுட் நிறுவனங்களுக்கு மெயில் அனுப்பி இத்திருட்டைப் பற்றி தெரிவிக்க ஆலோசித்துள்ளார்கள்.

ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டம் போல, இது மெயில் அனுப்பும் போராட்டம். 

வரும் ஞாயிற்றுக் கிழமை மெரீனா கடற்கரையில் காந்தி சிலைக்கு அருகில் பதிவர்கள் கூடி, சரியாக நாலு மணிக்கு ஒவ்வொருவரும் தங்கள் இன்டர்நெட் கனெக்சனுடன் கூடிய லேப்டாப்பில் இருந்து மெயில் அனுப்புவார்கள்.

மெரினாவுக்கு வரமுடியாத நபர்கள் வீட்டிலிருந்தோ அல்லது அருகில் உள்ள ப்ரொவ்சிங் சென்டர்களில் இருந்தோ மெயில் அனுப்பலாம்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட தமிழ் சினிமா இயக்குனர்கள் சங்கமே ஆடி போயிருக்கிறது.                                     



காப்பியடித்து படம் எடுத்து விட்டு கர்வத்துடனும், சிலசமயம் தன்னை யாரும் கொண்டாடவில்லையே என ஆதங்கத்துடனும் அலையும் மிஸ்கின் அவர்கள் தன் ரூமில் உலகப் படங்களின் சிடிக்கள் சிதறிக் கிடக்க, குவார்ட்டர் அடித்து நிலைகுலைந்து போயிருக்கிறார். ஒரு வாரம் அவர் தன்னுடைய கருப்பு கண்ணாடியை போடாமல் சுற்றி அலைந்ததாக தெரிகிறது.


 
"மங்காத்தாவின்" இறுதி கட்ட வேளைகளில் மூழ்கி இருந்த வெங்கட் பிரபுவோ, திரிஷாவிடம் போன் செய்து புலம்பி உள்ளார். தமிழ் ராப் இசை கலைஞன் பிரேம்ஜியும் அவருக்கு ஆதரவாய் திக்கி திக்கி நாலு வார்த்தை பேசியுள்ளார்.



இந்த செய்தியை கேள்விப்பட்டதிலிருந்து, கவுதவ் மேனன் அவர்கள் இரண்டு நாளாக சரியாக சாப்பிடவில்லையாம். தெய்வத் திருமகள் விஜய் அவர்கள், "விண்ணை தாண்டி வருவாயா" ஹிந்தி படப் பிடிப்பில் இருக்கும் எமி ஜாக்ஸனிடம் சாட் செய்து தன் மனகுமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.



எதோ ஒரு உலகப் படத்தை உருவி, அந்த கதையை எப்படி மாற்றி கொத்து பரோட்டா போடலாம் என சீரியஸாக கதை விவாதத்தில் இருக்கும் "மாற்றான்" படத்தின் இயக்குனர் கே.வி ஆனந்த், இந்த படத்தை ட்ராப் பண்ணி விடலாமா என யோசித்து வருகிறார்.

இதனால் இந்த தமிழ் சினிமா இயக்குனர்கள் அனைவரும் அடுத்து எந்த ஒரு படத்தையும் காப்பி அடிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

ஆங்கில காப்பி படங்களில் நடிக்கும் உலக நாயகன் கமல் உட்பட முன்னணி நடிகர்கள் அனைவரின் எதிர்காலமும் இதனால் கேள்வி குறியாகி உள்ளது.

சாதரணமாக தமிழ் பாடல்களை ரீமேக் பண்ண மறுத்து, ஆங்கில பாடல்களை மட்டுமே காப்பி அடிக்கும் ஜீவி பிரகாஷ் அவர்கள் இந்த மெயில் போராட்டத்தை பற்றி கருத்து சொல்ல மறுத்து விட்டார்.

தங்கள் தகிடு தத்தங்களை உலகுக்கு தெரிவிப்பதில் கூகுளின் பிளாகரும், வோர்ட் பிரஸ்சும் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றை தடை செய்ய முடியுமா? எனவும் கனவு காண்கிறார்கள்.







இனி ஹரி, லிங்குசாமி, பேரரசு காட்டில் மழை தான். அவர்களின் படங்களில் நடிக்க இனி ஒவ்வொரு ஹீரோவும் "அவன் இவன்" விஷால் ஆர்யா போல கட்டி புரண்டு சண்டை போடுவார்கள்.


Jul 18, 2011

தெய்வ திருமகள் - கர்ச்சீப் கொண்டு போங்க.




தான் பெற்ற மகளை இழந்து தவிக்கும் ஒரு குழந்தை மனசுள்ள தந்தை கஷ்டப்பட்டு தன் அன்பு மகளை மீட்டு தன்னுடன் வைத்துக்கொள்ள போராடும் (ஒரு பாசத் தலைவனின்) பாசப்போராட்டம் தான் "தெய்வ திருமகள்".

படம் ஆரம்பம் முதலே தன் நடிப்பால் அசத்தும் அந்த தந்தையின் நடிப்பு மக்கள் அனைவராலும் கொண்டாடப் படுகிறது. பதிவர்களும் தங்கள் பங்குக்கு படத்தை பற்றி ஆகா ஓகோ வென்று புகழ்ந்து தள்ளியுள்ளனர். விழுந்து, தவழ்ந்து கஷ்டப்பட்டு நடித்த ஹீரோவுக்கு கண்டிப்பாக இந்த வருட தேசிய விருது உண்டு என்றும் ஆருடம் கூறுகின்றனர்.

படத்தின் கதையின் படி , கள்ளம் கபடம் அறியாத தந்தையும், மகளும் சென்னையில் சந்தோசமாய் வாழ்ந்து வருகின்றனர். தந்தை அந்த ஊரில் உள்ள ஒரு பீர் பாக்டரியில் வேலை செய்து அந்த குழந்தையை படிக்க வைக்கிறார். ஹீரோவுக்கு பீர் பாட்டில்களை சரியாக பெட்டியில் அடுக்கி சரியாக இருக்கிறதா? என எண்ணி பார்க்கும் வேலை.

இப்படியிருக்க கனி பள்ளிக்கூடம் செல்லும் இடத்தில் அங்கே தாளளராக இருக்கும் நிராராடியா என்கிற பெண்ணுக்கும், கனிக்கும் ஒரு பிரிக்க முடியாத பாச பந்தம் ஏற்படுகிறது. இவர்களுக்கு இடையேயான வசனங்களை மட்டும் தனியே ஆடியோவாக ரிலீஸ் செய்யும் அளவுக்கு உலக தரம் வாய்ந்தவை. ஆனால் பிரச்சினை நிராராடியாவின் மூலமாக வருகிறது என்பது தான் படத்தின் ட்விஸ்ட்.

ஒரு இளவரசி போல தன் தந்தையின் பாதுகாப்பில் சென்னையில் வாழ்ந்து வரும் அந்த கவிதாயினி குழந்தையை, கூடா நட்புகள் டெல்லி கூட்டி சென்று போய் தங்கள் வீட்டில் சிறை வைக்கின்றனர்.

அதன் பின் என்ன ஆகிறது?
தந்தை எப்படி தன் மகளை மீட்கிறார்?
பரபரப்பாக போகும் திரைக்கதையில் "கடைசியில் கனி யாருக்கு?" என்று தெரிந்து கொள்ள படத்தை வெள்ளி திரையில் காண்க.



தன் அருமை மகளை தேடி, தன்னந்தனியாய் டெல்லியில் அலையும் அந்த தந்தை பரிதவிக்கும் காட்சியில் மனம் பதறுகிறது.

தன் தாய்மொழியில் ஒழுங்காக நாலு வார்த்தை சேர்த்து பேச முடியாத சூழ்நிலையில், ஹிந்தி தெரியாமல் அவர் ரோட்டில் பார்க்கும் எல்லோரிடமும் "கனி" "கனி" என்று தமிழில் புலம்பியபடியே டெல்லியில் சுற்றி அலைவது பரிதாபம்.

இந்நிலையில் கனியை மீட்க இந்தியாவின் மிகவும் பிரபலமான வக்கிலிடம் தஞ்சம் அடைகிறார். இவருக்காக அவர் பல லட்சம் காசு வாங்கி கொண்டு வாதாட ஒப்பு கொள்கிறார். கோர்ட்டில் பிரபல வக்கிலுக்கும் எதிர் தரப்பு வக்கிலுக்கும் நடக்கும் வாதங்கள் மிகவும் சுவாரஸ்யம்.

படத்தின் வசனங்கள் எல்லாமே ஷார்ப். உதாரணமாக, கோர்ட்டில் நடக்கும் கேஸ் தொடர்பாக ஒரு பெண் நிருபர் எழுப்பும் கேள்விக்கு "நீயும் ஒரு பெண்தானே?", " இதயம் இருப்பதன் அடையாளம், கேள்வி கேட்காமல் இருப்பது" என்று சொல்லும் வசனம் டாப்.

கிளைமேக்ஸ் காட்சிகளில் கூண்டில் நின்று கொண்டு "எனக்கு கனி வேணும். நான் கனிய நல்லா பார்த்துக்குவேன்" என்று கதறும் காட்சியில் நம்மோடு சேர்த்து, நீதிபதியாக வரும் முண்டாசு தாத்தா மன்மோகனும் கண்கலங்குகிறார். "என்ன இருந்தாலும் இந்த கேஸ் சட்டத்தின் மேற்பார்வையில் நடப்பதால், தன்னால் எதுவும் செய்ய முடியாது" என்று நா தழுதழுக்க தன் இயலாமையை எடுத்து கூறுகிறார்.

ஒரு தொப்புள் காட்சி, அக்குள் காட்சி என்று துளியும் ஆபாசம் இல்லாமல் நீண்ட நாள் கழித்து வந்த ஒரு குடும்ப படம்.

"உங்கள் குழந்தை பருவத்தில் தான் நீங்கள் கடைசியாக அழுதது. அதற்கு பிறகு எதற்கும் அழுததில்லை என்று சீன் போடுபவரா நீங்கள்?" 

இதோ இந்த படம் உங்களுக்காக தான்.

கனியை கூட்டி சென்று சூடு போட்டு கொடுமை படுத்தியதால் வந்த கொப்புளத்தை பார்த்து கனியின் தந்தை வெந்து உருகுவதில் உங்கள் கல் நெஞ்சமும் கரையக் கூடும். கண்ணீர் துடைத்து கர்ச்சீப் நனைந்து விட்டால், கர்ச்சீப்பை இறுக்கி பிழிந்து முன் சீட்டில் காயப் போடுங்கள்.


இப்படம் நூறு நாளை கடந்து மக்களின் நல்லாதரவால் ஆரவாரமாகவும் அழுகாச்சியாகவும் ஓடி வரலாற்று சாதனை படைக்கும் என்பதில் ஐயமில்லை.

Related

தெய்வ திருமகள் - நமீதா விமர்சனம்



Jul 14, 2011

லத்திகா பார்ட் - 2 அதிரடி ஆரம்பம்



தமிழகத்தின் இளம் சிங்கம் பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்து, நூற்று ஐம்பது நாட்களுக்கு மேலாக திரையரங்கில் ஓடி கொண்டிருக்கும் "லத்திகா" என்ற திரைக் காவியத்தால் தமிழ் திரையுலகம் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.

இப்படத்தின் கலெக்சன், உலகம் முழுவதும் வெளியான அவதார் படத்தின் கலெக்சனை இன்னும் நான்கே நாட்களில் முறியடித்து விடும் என்ற செய்தி ஹாலிவுட் நடிகர்களையும், இயக்குனர்களையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. இப்படத்தை காண ஜேம்ஸ் காமரூனும், டாம் குரூசும் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒபாமாவும் இதை பார்க்க விரும்புவதாக சொன்ன செய்தி டைம்ஸ் பத்திரிக்கையின் தலைப்பு செய்தியாக வந்துள்ளது.

படத்தை ஆங்கில சப் டைட்டில் உருவாக்கி அடுத்த வருடத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு அனுப்புமாறு, ஆஸ்கார் கமிட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனால் உலகநாயகன் முதல், சகல தமிழ் நடிகர்கள் அனைவரும் பயந்து, பீல்டில் தொடர்ந்து நிலைக்க, தங்கள் அடுத்தப் படத்துக்கான கதையை மிகுந்த கவனமுடன் கேட்டு வருகிறார்கள்.

எந்திரன் படத்தால் பாதிப்பு அடைந்த திரையரங்கு உரிமையாளர்கள், இப்படத்தின் லாபத்தால் அந்த கவலையை மறந்து மகிழ்ச்சியில் புன்னகை பூக்கின்றனர். திரையரங்குக்கு மக்கள் கூட்டம் கூட்டமாகவும், சாரை சாரையாகவும் தொடர்ந்து வந்து படத்தை பார்த்த வண்ணம் உள்ளனர்.

இதனால் இனி இருநூறு, முந்நூறு நாட்கள் என்று போஸ்டர் ஒட்டாமல், மொத்தமாய் காத்திருந்து "ஆயிரம் நாட்கள்" போஸ்டர் ஓட்டலாம் என்றும் பவர் ஸ்டார் பலமாக யோசித்து வருகிறாராம்.

இவருக்கு பெண்கள் மத்தியில் உள்ள கிரேஸ் எவ்வளவு என்பதற்கு, எஸ்.எஸ் மியூசிக் சேனல் நடத்திய "எனிதிங் பார் சீனி" என்ற நிகழ்ச்சி அந்த சேனலின் டி.ஆர்.பி ரேட்டிங்கை ஒரு மாதத்திற்கும் மேலாக எகிறச் செய்ததே சாட்சி. அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் அவரை சந்திப்பதற்காக கூவத்திலும் குளிக்க ரெடி என்று தெரிவித்தார். இன்னொரு பெண் அவரின் கட்டுமஸ்தான உடலும், முரட்டு மீசையும் தன்னை தினமும் இரவில் இம்சிப்பதாக சொல்லி வழிந்தார்.

லத்திகாவின் வெற்றியை தொடர்ந்து லத்திகா பார்ட் 2 எடுக்கப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் பவர் ஸ்டார். ஆனால் பார்ட் - 2 வை சீக்கிரம் எடுத்தாலும், இன்னும் ஒரு வருடம் கழித்தே வெளியிடுவதாயும் குறிப்பிட்டார். லத்திகா முதல் பார்ட்-இன், ஹெங் ஓவரே (Hang Over) இன்னும் மக்களிடம் போகாத நிலையே, அதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.

லத்திகா பார்ட் 2 எடுக்கப் போவதாக வந்த செய்தியை அடுத்து, தமிழிலும் இந்தியிலும் முன்னணி நடிகைகளிடம் போட்டா போட்டி உருவாகியுள்ளது. நெருங்கி தோழிகளான திரிஷாவும் ஸ்ரேயாவும் ஒரு நைட் கிளப்பில் இவ்விசயத்தால் தலைமுடியை பிடித்து சண்டை போட்டுள்ளனர்.

அவருடன் நடிப்பது பற்றி அனுஷ்காவிடம் கேட்ட போது, அடுத்த இரண்டு வருடங்களுக்கு தன் கால்சீட் புல்லாக இருந்தாலும், பவர் ஸ்டாருடன் ஜோடி சேர அவர் எந்த படத்தின் கால்சீட்டையும் ட்ராப் செய்வதாக உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.

ஆனால் பவர் ஸ்டார் என்ன நினைக்கிறார் என்ற ஆவலில் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவரின் சாய்ஸ் தீபிக படுகோன் அல்லது சொனாக்சி சின்கா. வயசானதால் ஐஸ்வர்யாவை அவர் கணக்கில் எடுத்து கொள்ள வில்லை. காத்திரீனா கைப்பையும் கண்ணசைவில் கழட்டி விட்டார்.

ஏகப்பட்ட தமிழ் நடிகர்களிடம் நடிக்க மறுத்து அவமான படுத்திய இலியானா, பவர் ஸ்டார் வீட்டு வாசலில் வாய்ப்பு கேட்டு பலமணி நேரம் நின்றும், அவர் கதவை திறக்க வில்லை. மனதையும் திறக்க வில்லை.

லத்திகா பார்ட் - 2, 2012 ஆம் ஆண்டின்  இறுதியில் வெளியாகி, ஆண்டுகள் கணக்காக வெற்றிநடை போட்டு, "மாயன்ஸ் காலண்டர் படி 2012 - இல் உலகம் அழியும்" என்ற கூற்றையும் முற்றிலும் பொய்யாக்கும் என்பதே நம் எல்லோருடைய நம்பிக்கை.