Mar 15, 2012

ரஜினியின் அடுத்த படத்தில், நித்தியானந்தா வீடியோவை கிராபிக்ஸ் பண்ணியவர்


தானும், தன்னால் பிரபலமான நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போல் வெளியான வீடியோ போலியானது என நித்தியானந்த சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

இதனால், அதை உண்மையானது போல் மிக தத்ரூபமாக உருவாக்கிய அந்த முகம் தெரியாத கிராபிக்ஸ் நிபுணருக்கு, தமிழ் சினிமாவில் மிக பெரிய எதிர்காலம் உருவாகும் வாய்ப்புள்ளது.

சமீபத்தில் வெளியான "அரவான்" படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளின் தரம் மோசமானதாய் இருந்தது. கிராபிக்ஸை சரியாய் பண்ணியிருக்கும் பட்சத்தில் படத்திற்கு அது கூடுதல் பலமாக இருந்திருக்கும் என அதன் இயக்குனர் வசந்த பாலன் சொன்னார்.

இனி தன் படங்களிலும், ஹாலிவுட் ஆட்களை வைத்து, அதிக பணம் செலவழித்து கிராபிக்ஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று பிருமாண்ட இயக்குனர் சங்கர் தெரிவித்தார். ரஜினியும் அவரது படங்களில் அவரை வயது குறைவான ஆளாக காண்பிக்க செய்து, சச்சினை போல ரிடைர்டு ஆகாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கும் ஐடியா உள்ளதாக, உலக மகா நடிகர் கமல்ஹாசனுடன் கலந்தாலோசித்துள்ளதாக செய்தி கசிந்துள்ளது. 

"என்னுடன் முன்னணி நடிகைகள் யாரும் நடிக்க முன் வரவில்லை என்றால் கூட, இந்த கிராபிக்ஸ் நிபுணரை வைத்து, நான் ஏஞ்சலினா ஜோலியுடன் நடித்தது போல் படம் எடுத்து வெளியிடுவேன்" என்று தற்போதை முன்னணி நட்சத்திரம் "பவர் ஸ்டார்" சீனிவாசன் நமது Tamil Faking நியூஸ்-க்கு பேட்டியளித்தார். கடைசியாக இவர் நடிக்க கூப்பிட்டு, நடிகை ஹன்சிகா அவர்கள், இவரது முகத்தில் காரி துப்பியது குறிப்பிடத்தக்கது.




அந்த போலி வீடியோ வெளியான நேரத்தில், நடிகர் வடிவேலு கூட நித்தியானதா கெட்டப்பில் நடிப்பதாக செய்தி வெளியானது. அதை கேள்விப்பட்ட நித்தியானதா, வடிவேலுவை "என்னுடைய கெட்டபில் நடித்தால், நீ அட்ரஸ் இல்லாமல் போய் விடுவாய்" என எச்சரித்தார்.

அவரின் சொல்படியே வடிவேலு தமிழ் சினிமாவில் முகவரி தொலைந்து காணாமல் போய் விட்டார். 

அதனால் அந்த போலி வீடியோவை உருவாக்கிய முகம் தெரியாத நபரை உங்கள் யாருக்காவது தெரிந்திருந்தால், தமிழ் இயக்குனர்கள் சங்க தலைவர் எஸ்.எ.சந்திரசேகரிடம் சொல்லவும். நடிக்கவே தெரியாத தன் மகனுக்கும் உதவியாய் இருக்கும். தமிழ் சினிமா உலகம் உங்களுக்கு என்றும் கடமை பட்டிருக்கும்.



Sep 22, 2011

உதவி இயக்குனர்களுக்கு 3G Broadband கனேக்சனுடன் லேப்டாப் வழங்கிய டைரக்டர் விஜய்




மிஷ்கின் தமிழ் சினிமாவின் ஒரு வித்தியாசமான இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த மாதம் அவர் தன் உதவி இயக்குனர்களுக்கு நிறைய வசதிகளை செய்து கொடுத்தது, திரையுலகில் பரவலாய் பேசப் பட்டது.

தங்கும் வசதி.
டேபிள் டென்னிஸ் விளையாடுவதற்கான பொருட்கள்.
தனி லைப்ரரி.
பேங்க் அக்கௌண்டில் மாதாமாதம் குறிப்பிட்ட தொகை.

அதை கேள்விப்பட்ட "மதராசப் பட்டினம்", "தெய்வதிருமகள்" புகழ் இயக்குனர் விஜய் அவர்களும் அவருடைய உதவி இயக்குனர்களுக்கு ஏதாவது செய்து கொடுக்க நினைத்தார்.

அப்போது உதித்தது தான் இந்த ஐடியா.

சோனி VAIO லேப்டாப்புடன் ரிலைன்ஸ் 3G நெட்வொர்க் அன்லிமிடெட்(Unlimited) கனெக்சன்.


தன் உதவி இயக்குனர்கள் இனி கதை தேடி பர்மா பஜார் சென்று கால் கடுக்க அலைய கூடாது என்ற நல்லெண்ணத்திலேயே இந்த முடிவு எடுத்ததாக அவர் கூறினார்.


அது தவிர இலவச டோர்ரென்ட்(Torrent) சாப்ட்வேர் மூலமாக எந்த நாட்டு மொழி படத்தையும் சிரமம் இல்லாமல் டவுன்லோட் செய்து சப்டைட்டிலுடன் பார்க்க முடிவதால், வசனங்கள் புரிவதிலும் எழுதுவதிலும் பிரச்சினை இல்லை.

இதைப் பற்றிய செய்தியை நம்மிடம் பகிர்ந்து கொண்ட விஜயின் உதவியாளர்களில் ஒருவர் "புதிதாய் ஒரு கதையை தேடுவதில் தமிழ் இயக்குனர்களிடையே பயங்கர போட்டி நிலவுவதால், இந்த வசதி என் கேரியரை தக்க வைக்க உதவும்" என்று கூறினார்.


பிரபல இயக்குனர்களின் இந்த செயல், மற்ற பிரபல இயக்குனர்களான கே.வி ஆனந்த், கவ்தவ் மேனன், உலக நாயகன் மற்றும் கே.எஸ் ரவிகுமார் போன்றவர்களிடம் ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களும் தங்கள் உதவி இயக்குனர்களுக்கு என்ன கொடுப்பதென்று ரூம் போட்டு யோசித்து வருகிறார்களாம்.


ஆனால் "ஜெயம்" ராஜா மட்டும் இதை பற்றி கவலைப் படாமல் ஹைதிராபாத்தில் சுற்றி வருவதாக தகவல்கள் சுற்றி வருகின்றன.



Aug 30, 2011

டெல்லி போலீஸின் பெல்லியை கலக்கிய டாக்டர் விஜய்

கடந்த வாரங்களில் அன்னா ஹசாரேவின் போராட்டத்தில் ஒரு முக்கிய திருப்பு முனை நடந்ததென்று சொன்னால், அது நம்ம இளைய தளபதியின் (இன்னும் எத்தனை வருஷத்திற்கு?) டெல்லி விஜயமும், ஊழலுக்கு எதிரான அவரது ஆதரவும் தான்.

அவர் தன்னை ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இந்த தமிழுலகத்திற்க்கு அறிவிக்கும் நிகழ்வாக இந்த நிகழ்ச்சி தென்படுகிறது.





ஊழலுக்கு எதிரான ஆதரவை மட்டுமே, அன்னா ஹசாரேவுக்கு கொடுக்க அவர் சென்றிருந்தார் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறானதே!.

அன்னா ஹசாரேவை கவனிக்க அங்கேயே நிறைய டாக்டர்கள் இருந்தார்களே, அப்புறம் எதற்கு நம்ம டாக்டர் டெல்லி சென்றார்?  என்று நீங்கள் கேட்கலாம்.

அவர் போவதற்கு முன்பு, டெல்லி போலிஸ் அன்னா ஹசாரேவை வலுக்கட்டாயமாய் ராம்லீலா மைதானத்திலிருந்து வெளியேற்றுவதாய் செய்தி கசிந்ததை அடுத்தே, விஜய் அவர்கள் அன்னா ஹசாரேவுக்கு பாதுகாப்பு கொடுக்க தீர்மானித்து, தன் ரசிக கண்மணிகளோடு டெல்லி புறப்பட்டார்.

ஏற்கனவே அசினுக்கு அவர் பாடிகார்டாக, காவலன் படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அன்னா ஹசாரேவுக்கு பாதுகாப்பு கொடுத்து, அவர் நாட்டுக்கே காவலனாக மாறிவிட்டார்.

விஜய்யின் டெல்லி விஜயம் பற்றி அறிந்த டெல்லி போலீஸாரின் பெல்லி(வயிறு) எல்லாம் கலங்கி விட்டது. இதனால் அன்னாவை வெளியேற்றும் அவர்கள் திட்டம் தவிடு பொடியானது.

டெல்லி போலீஸாரின் இந்த கலக்கத்திற்கு காரணம், விஜய் அவர்கள் தன் மாஸ்டர் பீஸ் களான, குருவி, சுறா படங்களை அவர்களுக்கு போட்டு காட்டி பயமுறுத்தி உள்ளார். இனியும் டெல்லி போலீசார் வேறு ஏதாவது திட்டம் தீட்டினால், தானே அடுத்து நேரடி ஹிந்தி படங்களில் அடுத்தடுத்து நடிப்பேன் என்று கூறியும் மிரட்டியுள்ளார்.

இதனை டெல்லி போலீசார் ஒருவர் நம் Tamil Faking News -க்கு தெரிவித்தார். அவர் வேண்டாம் என்று கேட்டு கொண்டதால் அவர் பெயரை இங்கு வெளியிடவில்லை.





அன்னா ஹசாரேவின் போராட்டம் ஓரளவு வெற்றி பெற்றதில் தமிழகத்தின் பங்களிப்பை அதிகம் இடம் பெற செய்ததில், விஜய் மக்கள் மனதில் நீங்கா இடம் பெறுகிறார்.

நடிகர் விஜய்யின் "மக்கள் கட்சி" வருகின்ற பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதாக வந்த செய்தியை அடுத்து, இது மக்களிடையே நன் மதிப்பை பெரும் முயற்சியா? என்ற கேள்விக்கு, அவர் தந்தை எஸ்.எ. சந்திர சேகர் அவர்கள்,

'இது எதையும் எதிர்பாராமல், நாட்டு நலனை கருதியே அவர் தானாக எடுத்த முடிவு. என் மகன் விஜய் சொல்லித்தான், தமிழ்நாட்டு மக்கள் போன தேர்தலில் ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்தார்கள். முதல்வரையே தேர்ந்தெடுத்த விஜய்க்கு, அடுத்து பிரதமரையும் தேர்ந்தெடுக்கும் வல்லமை உள்ளது. 2016 -இல் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார். 2020 -இல் விஜய் இந்தியாவின் பிரதமர் ஆவார். அப்போது தான் அப்துல் கலாமின் "இந்தியா 20-20" கனவு நனவாகும்'

என்று நம்பிக்கையோடு Tamil Faking News -க்கு பதிலளித்தார்.


Jul 22, 2011

காப்பி அடிக்க பயப்படும் தமிழ் சினிமா இயக்குனர்கள்

சமீப காலமாக வெளிவரும் தமிழ் சினிமாவின் கதைகள் உலகப் படங்களில் இருந்து திருடப் பட்டவையே. 

ஒரு படத்தை காப்பி அடித்து எடுத்து விட்டு "பத்து வருடத்திற்கு முன்னாலேயே நான் இந்த கதையை யோசித்தேன் என்று அவதார் பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் போல"  கூச்சப் படாமல் பந்தாவாய் நடிகைகளுடன் உட்கார்ந்து டிவிகளில் பேட்டி கொடுக்கும் இயக்குனர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது 

சமீபத்திய புதுவரவு "தெய்வத் திருமகள்". இதன் சிறப்பே ஹீரோவின் காஸ்ட்யும் முதற்கொண்டு ஹேர் ஸ்டைல் வரை அப்படியே அலேக்காக காப்பி அடித்தது தான்.

தமிழில் சொந்தமாய் கதை யோசித்து படம் எடுக்கும் இயக்குனர்கள் ஹரி, லிங்குசாமி, பேரரசு போன்ற ஒரு சிலரே.

"ஏன் இந்த இயக்குனர்கள் கவலைப் படாமல் காப்பி அடிக்கிறார்கள்?" என்ற கேள்விக்கு முண்ணனி ப்ளாகர் ஒருவர்,

"தமிழ் நாட்டின் பெருவாரியான மக்கள் உலக படங்கள் பார்க்காததே இதற்கு காரணம். இங்கு என்னைப் போன்ற சில சதவிகித மக்களே உலக படங்களுக்கு பரிட்சயம். படித்த மக்களின் அறிவே இன்னும் தமிழ்நாட்டை தாண்ட வில்லை. இன்னும் அவர்கள் கமலையும், ரஜினியையுமே கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். அதனால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் இருண்டகாலம் ஆகி கொண்டிருக்கிறது. இது தடுக்கப் பட வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எந்த ஆண்டவனாளையும் காப்பாற்ற முடியாது."  என்று
பதிலளித்தார். 

இது போல படைப்பு திருட்டுகளை (plagiarism) ஒழிக்க, பிரபல பதிவர்கள் எல்லாம் சேர்ந்து, அந்தந்த ஒரிஜினல் படங்களை எடுத்த ஹாலிவுட் நிறுவனங்களுக்கு மெயில் அனுப்பி இத்திருட்டைப் பற்றி தெரிவிக்க ஆலோசித்துள்ளார்கள்.

ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டம் போல, இது மெயில் அனுப்பும் போராட்டம். 

வரும் ஞாயிற்றுக் கிழமை மெரீனா கடற்கரையில் காந்தி சிலைக்கு அருகில் பதிவர்கள் கூடி, சரியாக நாலு மணிக்கு ஒவ்வொருவரும் தங்கள் இன்டர்நெட் கனெக்சனுடன் கூடிய லேப்டாப்பில் இருந்து மெயில் அனுப்புவார்கள்.

மெரினாவுக்கு வரமுடியாத நபர்கள் வீட்டிலிருந்தோ அல்லது அருகில் உள்ள ப்ரொவ்சிங் சென்டர்களில் இருந்தோ மெயில் அனுப்பலாம்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட தமிழ் சினிமா இயக்குனர்கள் சங்கமே ஆடி போயிருக்கிறது.                                     



காப்பியடித்து படம் எடுத்து விட்டு கர்வத்துடனும், சிலசமயம் தன்னை யாரும் கொண்டாடவில்லையே என ஆதங்கத்துடனும் அலையும் மிஸ்கின் அவர்கள் தன் ரூமில் உலகப் படங்களின் சிடிக்கள் சிதறிக் கிடக்க, குவார்ட்டர் அடித்து நிலைகுலைந்து போயிருக்கிறார். ஒரு வாரம் அவர் தன்னுடைய கருப்பு கண்ணாடியை போடாமல் சுற்றி அலைந்ததாக தெரிகிறது.


 
"மங்காத்தாவின்" இறுதி கட்ட வேளைகளில் மூழ்கி இருந்த வெங்கட் பிரபுவோ, திரிஷாவிடம் போன் செய்து புலம்பி உள்ளார். தமிழ் ராப் இசை கலைஞன் பிரேம்ஜியும் அவருக்கு ஆதரவாய் திக்கி திக்கி நாலு வார்த்தை பேசியுள்ளார்.



இந்த செய்தியை கேள்விப்பட்டதிலிருந்து, கவுதவ் மேனன் அவர்கள் இரண்டு நாளாக சரியாக சாப்பிடவில்லையாம். தெய்வத் திருமகள் விஜய் அவர்கள், "விண்ணை தாண்டி வருவாயா" ஹிந்தி படப் பிடிப்பில் இருக்கும் எமி ஜாக்ஸனிடம் சாட் செய்து தன் மனகுமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.



எதோ ஒரு உலகப் படத்தை உருவி, அந்த கதையை எப்படி மாற்றி கொத்து பரோட்டா போடலாம் என சீரியஸாக கதை விவாதத்தில் இருக்கும் "மாற்றான்" படத்தின் இயக்குனர் கே.வி ஆனந்த், இந்த படத்தை ட்ராப் பண்ணி விடலாமா என யோசித்து வருகிறார்.

இதனால் இந்த தமிழ் சினிமா இயக்குனர்கள் அனைவரும் அடுத்து எந்த ஒரு படத்தையும் காப்பி அடிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

ஆங்கில காப்பி படங்களில் நடிக்கும் உலக நாயகன் கமல் உட்பட முன்னணி நடிகர்கள் அனைவரின் எதிர்காலமும் இதனால் கேள்வி குறியாகி உள்ளது.

சாதரணமாக தமிழ் பாடல்களை ரீமேக் பண்ண மறுத்து, ஆங்கில பாடல்களை மட்டுமே காப்பி அடிக்கும் ஜீவி பிரகாஷ் அவர்கள் இந்த மெயில் போராட்டத்தை பற்றி கருத்து சொல்ல மறுத்து விட்டார்.

தங்கள் தகிடு தத்தங்களை உலகுக்கு தெரிவிப்பதில் கூகுளின் பிளாகரும், வோர்ட் பிரஸ்சும் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றை தடை செய்ய முடியுமா? எனவும் கனவு காண்கிறார்கள்.







இனி ஹரி, லிங்குசாமி, பேரரசு காட்டில் மழை தான். அவர்களின் படங்களில் நடிக்க இனி ஒவ்வொரு ஹீரோவும் "அவன் இவன்" விஷால் ஆர்யா போல கட்டி புரண்டு சண்டை போடுவார்கள்.