Aug 30, 2011

டெல்லி போலீஸின் பெல்லியை கலக்கிய டாக்டர் விஜய்

கடந்த வாரங்களில் அன்னா ஹசாரேவின் போராட்டத்தில் ஒரு முக்கிய திருப்பு முனை நடந்ததென்று சொன்னால், அது நம்ம இளைய தளபதியின் (இன்னும் எத்தனை வருஷத்திற்கு?) டெல்லி விஜயமும், ஊழலுக்கு எதிரான அவரது ஆதரவும் தான்.

அவர் தன்னை ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இந்த தமிழுலகத்திற்க்கு அறிவிக்கும் நிகழ்வாக இந்த நிகழ்ச்சி தென்படுகிறது.





ஊழலுக்கு எதிரான ஆதரவை மட்டுமே, அன்னா ஹசாரேவுக்கு கொடுக்க அவர் சென்றிருந்தார் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறானதே!.

அன்னா ஹசாரேவை கவனிக்க அங்கேயே நிறைய டாக்டர்கள் இருந்தார்களே, அப்புறம் எதற்கு நம்ம டாக்டர் டெல்லி சென்றார்?  என்று நீங்கள் கேட்கலாம்.

அவர் போவதற்கு முன்பு, டெல்லி போலிஸ் அன்னா ஹசாரேவை வலுக்கட்டாயமாய் ராம்லீலா மைதானத்திலிருந்து வெளியேற்றுவதாய் செய்தி கசிந்ததை அடுத்தே, விஜய் அவர்கள் அன்னா ஹசாரேவுக்கு பாதுகாப்பு கொடுக்க தீர்மானித்து, தன் ரசிக கண்மணிகளோடு டெல்லி புறப்பட்டார்.

ஏற்கனவே அசினுக்கு அவர் பாடிகார்டாக, காவலன் படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அன்னா ஹசாரேவுக்கு பாதுகாப்பு கொடுத்து, அவர் நாட்டுக்கே காவலனாக மாறிவிட்டார்.

விஜய்யின் டெல்லி விஜயம் பற்றி அறிந்த டெல்லி போலீஸாரின் பெல்லி(வயிறு) எல்லாம் கலங்கி விட்டது. இதனால் அன்னாவை வெளியேற்றும் அவர்கள் திட்டம் தவிடு பொடியானது.

டெல்லி போலீஸாரின் இந்த கலக்கத்திற்கு காரணம், விஜய் அவர்கள் தன் மாஸ்டர் பீஸ் களான, குருவி, சுறா படங்களை அவர்களுக்கு போட்டு காட்டி பயமுறுத்தி உள்ளார். இனியும் டெல்லி போலீசார் வேறு ஏதாவது திட்டம் தீட்டினால், தானே அடுத்து நேரடி ஹிந்தி படங்களில் அடுத்தடுத்து நடிப்பேன் என்று கூறியும் மிரட்டியுள்ளார்.

இதனை டெல்லி போலீசார் ஒருவர் நம் Tamil Faking News -க்கு தெரிவித்தார். அவர் வேண்டாம் என்று கேட்டு கொண்டதால் அவர் பெயரை இங்கு வெளியிடவில்லை.





அன்னா ஹசாரேவின் போராட்டம் ஓரளவு வெற்றி பெற்றதில் தமிழகத்தின் பங்களிப்பை அதிகம் இடம் பெற செய்ததில், விஜய் மக்கள் மனதில் நீங்கா இடம் பெறுகிறார்.

நடிகர் விஜய்யின் "மக்கள் கட்சி" வருகின்ற பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதாக வந்த செய்தியை அடுத்து, இது மக்களிடையே நன் மதிப்பை பெரும் முயற்சியா? என்ற கேள்விக்கு, அவர் தந்தை எஸ்.எ. சந்திர சேகர் அவர்கள்,

'இது எதையும் எதிர்பாராமல், நாட்டு நலனை கருதியே அவர் தானாக எடுத்த முடிவு. என் மகன் விஜய் சொல்லித்தான், தமிழ்நாட்டு மக்கள் போன தேர்தலில் ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்தார்கள். முதல்வரையே தேர்ந்தெடுத்த விஜய்க்கு, அடுத்து பிரதமரையும் தேர்ந்தெடுக்கும் வல்லமை உள்ளது. 2016 -இல் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார். 2020 -இல் விஜய் இந்தியாவின் பிரதமர் ஆவார். அப்போது தான் அப்துல் கலாமின் "இந்தியா 20-20" கனவு நனவாகும்'

என்று நம்பிக்கையோடு Tamil Faking News -க்கு பதிலளித்தார்.